அனைத்து பாக்கியங்களும் பெற்று வாழ ஆடி மாத வழிபாடு

காலபுருஷ தத்துவப்படி நான்காவது ராசி கடகம். இதில் அதிகாரம் மற்றும் ஆதிக்கம் பெற்ற செவ்வாய் பகவான் தனது பலத்தை இழக்கிறார்.

மேலும் ஸ்ரீ சூரிய பகவான் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலமான ஆடி மாதத்தில் சந்திர பகவானின் பலம் கூடுகிறது.

மேலும் காலபுருஷ தத்துவத்தின் பாக்கியதிபதி ஆன குரு பகவான் உச்சம் பெறும் ராசி கடகமே ஆகும். எனவே இந்த மாதத்தில் தேவியை மனதார வழிபடும் போது அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று வளமாக வாழலாம்.

ஆடி மாதத்தின் முக்கிய விசேஷங்கள்

ஆடி மாதத்தில் பல ஆன்மிக வைபவங்களும், விழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பலன்களைத் தரக்கூடியவை ஆகும்.

  • ஆடி பௌர்ணமி
  • ஆடி பூரம்
  • ஆடி பெருக்கு
  • ஆடி அமாவாசை
  • ஆடி வெள்ளி
  • நாக பஞ்சமி
  • வரலட்சுமி விரதம்
  • ஆடிக்கிருத்திகை

மருத்துவம் நிறைந்த ஆடி மாத வழிபாடு

பொதுவாக ஆடி மாதத்தில் அதிக காற்றும், உஷ்ணமும் இருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் சக்தி வழிபாட்டில் இந்த உஷ்ணத்தைக் குறைக்கக்கூடிய கூழ், எலுமிச்சம்பழம் போன்றவற்றை அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த அதிக காற்றில் தொற்று வியாதிகள் பரவாமல் இருக்க வேப்பிலை கொண்டு வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.

முன்னோர்களின் ஆசி பெறும் தட்சிணாயன புண்ணியகாலத்தில், நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வந்து சந்ததியினரை ஆசிர்வாதம் செய்வார்கள். அதனால் தான் ஆடி அமாவாசையில் அவர்களை வரவேற்கும் விதமாக வழிபாடு செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாத அமாவாசை அன்று பித்ருகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால்தான் எந்த ஒரு சுபநிகழ்ச்சிகளையும் இந்த இரு மாதங்களில் செய்வதில்லை.

ஆடிப்பெருக்கு நன்னாளில் விதைத்தால் மழை காலத்தில் பயிர்கள் வளர்ந்து, தை மாதத்தில் அறுவடை செய்கிறோம். அதேபோல் இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு தானதர்மமும் பன்மடங்கு பலனைத் தரும். ஆடி மாதத்தில் நாம் செய்யும் தான தர்மமும், முன்னோர்கள் வழிபாடும் நம் சந்ததியினருக்கு பிற்காலத்தில் புண்ணியங்களை வழங்கும். அனைவரும் தங்கள் குலதெய்வ வழிபாடு செய்வதற்கு உகந்த மாதம் இந்த ஆடி மாதம்.

நம் தேவைகளை அறிந்து வளங்களை வழங்கும் அன்னை

நம் இல்லத்தில் நம் தேவைகளை நாம் கேட்கும் முன் நமக்குக் கொடுக்கும் உள்ளம் நம் தாய்க்கு மட்டும்தான் உண்டு.

அதேபோல் இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும், மனித வாழ்க்கைக்கும் தேவையான அனைத்து சுக போகங்களையும் வாரி வழங்கும் தாய் நம் அன்னை அகிலாண்டேஸ்வரி தான். அதனால் தான் ஜோதிடத்தில் நான்காவது ராசியான கடகத்தை சுகஸ்தானம் என்று சொல்கிறோம். எனவே, இந்த மாதத்தில் ஸ்ரீ சக்தி தேவியையும், காவல் தெய்வங்களையும் வணங்கி வாழ்வில் அனைத்து சுகபோகங்களையும் பெறலாம்.

12 ராசியினர் வணங்க வேண்டிய சக்தி தெய்வங்கள்

ஆடி மாதத்தில் 12 ராசியினரும் தங்களுக்குரிய சக்தி தேவதைகளை வணங்கி வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்:

  • மேஷம் - ஸ்ரீ துர்க்கை
  • ரிஷபம் - அன்னபூரணி
  • மிதுனம் - ஸ்ரீ சரஸ்வதி
  • கடகம் - ஸ்ரீ பார்வதி
  • சிம்மம் - ஸ்ரீ வரதாம்பிகை
  • கன்னி - அலமேலுமங்கை தாயார்
  • துலாம் - ஸ்ரீ மங்களாம்பிகை
  • விருச்சிகம் - ஸ்ரீ காளி
  • தனுசு - ஸ்ரீ காமாட்சி
  • மகரம் - எல்லை தெய்வங்கள்
  • கும்பம் - ஸ்ரீ விசாலாட்சி
  • மீனம் - ஸ்ரீ மீனாட்சி